கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் நேற்று (19/11/2022) மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது? யார் காரணம்? என்பது தொடர்பாக, கர்நாடகா மாநில காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காவல்துறையினர், மத்திய அமைப்புகளுடன் இணைந்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையில் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த நபருக்கு, நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் இருக்கக்கூடிய ஜூஜூவாடி பகுதியில் தமிழக போலீசார் கர்நாடகாவில் இருந்து தமிழக நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் பலத்த சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.