Published on 04/07/2018 | Edited on 04/07/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள காந்தி சிலைக்கு அருகே சாலையில் செவ்வாய் மதியம் 2 மணியளவில் பெண்கள் பயன்படுத்தும் கை பை ஒன்று கிடந்துள்ளது.
அந்த வழியாக சிஐடியு ஆட்டோ சங்கத்தை சார்ந்த கார்த்தி என்பவர் வேறு ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு சவாரி சென்றுள்ளார். அப்போது சாலையில் கிடக்கும் கை பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் ரூ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரூ 2 ஆயிரம் நோட்டுக்கள், 2 பவுன் தங்க ஜெயின், ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்று இருந்துள்ளது.
இவர் அழைத்து சென்ற சவாரியை சம்பந்தபட்ட இடத்தில் விட்டுவிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்லும் போது கை பையில் இருந்த செல்போன் தொடர்ந்து ஒலித்தவாறு இருந்தது அதனை எடுத்து பேசியுள்ளார்.
எதிர் முனையில் ஒரு பெண் நான் சிதம்பரம் கே.ஆர்.எம். நகரை சேர்ந்தவர் எனது பெயர் கிருத்திகா, கணவர் பெயர் ராஜாமணி பையை வீட்டுக்கு வரும் போது தொலைத்துவிட்டேன் என்று அழுதுள்ளார். பிறகு அவர்கள் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆட்டோ நிறுத்ததிற்கு வரவழைத்து அவர்களிடம் கை பையை ஒப்படைத்துள்ளனர். இது அனைவரின் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.