கோவை மாவட்டத்தில் உள்ள பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்துக் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, வாகனம் ஓட்டுபவர்களிடம் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருக்கிறதா எனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அந்தப் பகுதியில் வந்த ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் செய்யப்பட்டது.
அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த ஆட்டோவையும் நிறுத்தியுள்ளனர். வழக்கம் போல டிராபிக் போலீசாரை கண்டதும் தனது டிரைவிங் லைசன்ஸ், ஆட்டோவின் ஆர்சி புக் என அனைத்தையும் எடுத்துக் காண்பித்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். ஆனால், அவரின் பேச்சு மது அருந்தியது போல இருந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் கீழே இறங்காமல் ஆட்டோ டிரைவர், அதான் எல்லாம் சரியா இருக்குல்ல அப்றம் ஏன் கீழ இறங்குன்றீங்க எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிராபிக் போலீஸ், முதலில் நீ கீழ இறங்கு... என அழுத்தமாகக் கூறியுள்ளனர். அப்போது கீழே இறங்கிய ஆட்டோ ஓட்டுநர், சார் நான் ஒரு முக்கியமான வேலையா போறேன் சார்... என்ன விடுங்க எனக் கூறியிருக்கிறார். இதனால் மேலும் கடுப்பான போலீசார், முக்கியமான வேலைக்கு போற நீ எதுக்காக குடித்துவிட்டு வண்டி ஓட்ற? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநரோ, ஏங்க நான் சரக்கெல்லாம் அடிக்கவில்லை எனப் பதில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து போலீசார், அவரை ஒருமையில் திட்டியுள்ளார்.
உடனே சட்டென்று கோபப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் சோதனையில் ஈடுபட்ட டிராபிக் போலீசை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமாகியுள்ளது. அப்போது ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இதனைக் கண்டதும் மேலும் சில டிராபிக் போலீசாரும் அங்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநரை நீ குடிச்சிருக்கிறது எல்லாருக்குமே தெரியுது. அதனால் அமைதியா இரு எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் அமைதியாகாத ஆட்டோக்காரர், தன்னை அந்தக் காவலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், அது ரொம்ப தவறான வார்த்தை எனவும் கூறியிருக்கிறார்.
இவ்வாறு மற்ற போக்குவரத்து காவலர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, சம்பந்தபட்ட டிராபிக் போலீஸ் ஓடி வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது காலால் உதைத்துள்ளார். இவ்வாறு உதைக்கும்போது, காவலரின் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தன்னை உதைத்த போக்குவரத்து காவலர் மீது ஆட்டோ ஓட்டுநரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளார். உடனே அருகில் இருந்த டிராபிக் போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து, போலீஸ் மேலேயே கை வைப்பியா? என சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த ஆட்டோ ஓட்டுநரை ஒரு வழியாக காவல் நிலையம் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநரும் டிராபிக் போலீசும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் போலீசாரின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், அங்கு நின்ற சில இளைஞர்கள் டிராபிக் போலீசை மீட்டு அவரின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இது அனைத்தையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.