புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
’’தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை இணைச் செயலாளர்களாக நியமிப்போம் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் மூலம் அரசு நிர்வாகங்களை சீரழிக்கும் வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த செயலால் நிர்வாகங்கள் சீரழிந்துவிடும். புதுச்சேரி மாநில அரசின் நிர்வாகத்தை முழுமையாக கையில் எடுக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. சுற்றரிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறோம். வெளியில் இருந்து இணைச்செயலாளரை நியமித்தால் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது என அந்த கடிதத்தில் தெரிவிக்க உள்ளோம்.
.
பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் கிரண்பேடி கூறியிருப்பதன் மூலம் அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை என தெரிகிறது. வாட்ஸ் அப் மூலம் வரும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வாட்ஸ் அப் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், வாட்ஸ் அப் மூலம் எந்த உத்தரவு வந்தாலும் அதன் மூலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து துறை செயலர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
’’என்றார்.