வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் வழியாக பயணமாகிறது கௌண்டன்யா நதி. குடியாத்தம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஆறாகவும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு நீர் தரும் நிதியாக இது விளங்குகிறது. தற்போது நீர் ஓடாத இந்த ஆற்றில் இருந்து டிப்பர், லாரி, மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்கிறார்கள் பலரும்.
இதனை கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய் துறை, காவல்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மணல் கடத்துபவர்கள் மாதாமாதம் மாமூல் தந்துவிடுகிறார்கள். மாமூல் வாங்குவதாலே மணல் கடத்தலை எந்த துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை, வழக்கு போடுவதில்லை என்கிற குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வந்தது. பொதுமக்களின் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என நிரூபிப்பது போல் மணல் கடத்தல்காரரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் செல்போனில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் நகரிலுள்ள போக்குவரத்து பிரிவு காவல் அதிகாரி ஒருவரும் – மணல் கடத்தல்காரரான முரளி என்பவரும் பேசிக்கொள்ளும் செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது. அதில், “நான் ஆயிரம் ரூபாய் உங்க அக்கவுண்ட்டுக்கு அனுப்புனேன்தானே அதை திருப்பித்தாங்க, மனசாட்சி இல்லையா உங்களுக்கு? என் வண்டியை பிடிச்சி அபராதம் போட்டிங்க இல்ல, இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் புடிங்க, அபராதம் போடுங்க நான் பார்த்துக்கறன் என சவால் விடுகிறார். நீ அபராதம் போட்ட சிலிப் கொண்டுவா நான் கேன்சல் செய்து தர்றன்” என சமாதானம் பேசும் போலிஸ் அதிகாரி, அதன்பின்னர் கெஞ்சுகிறார்.
பாலாற்று பகுதியில், கௌண்டயா நதியில் மணல் ஏற்றி வரும் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகள் மாதந்தோறும் காவல்நிலையத்துக்கு, வருவாய்த்துறைக்கு லஞ்சம் தரவேண்டுமாம். அப்படி தரப்படும் வண்டிகளுக்கு சங்கேத குறியீடு எழுதப்படும் அல்லது ஸ்டிக்கராக ஒட்டப்படும் அந்த வண்டிகள் காவல்துறையினர் பிடிக்கவோ, வழக்கு பதிவு செய்யவோ, அபராதம் விதிக்கவோ கூடாது என்பதை மரபாக போலிஸார் வைத்துள்ளனர். குறியீடு இல்லாத மணல் வண்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்படும்.
மாதாமாதம் மாமூல் தரும் வண்டியை போலிஸ் அதிகாரி பிடித்து வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தாலே லஞ்சம் தந்தவர் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால், லஞ்சம் தந்தவர்கள், அது யாராக இருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் மதிக்கமாட்டார்கள் என்பதையும் இந்த ஆடியோ வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வேலூர் மாவட்ட காவல்துறைக்கு தலைக்குனிவை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.