அமாவாசை திதிகளில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்ச அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய 3 அமாவாசை தினங்களும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க ஏற்ற மாதங்களாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடி அமாவாசை மற்றும் தலை ஆடி தினமான இன்று கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் மக்கள் கூடுவார்கள் என்ற நோக்கில் பேரூராட்சி நிர்வாக ஏற்பாட்டின் பேரில் சாமியனா பந்தல் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் நிழலில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்குத் திதி கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் காவிரி ஆற்றில் நீராடி, தங்களது முன்னோர்களுக்குத் திதி கொடுத்து, ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்று மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், பிரம்மா மற்றும் அம்பாள் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டனர். கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் தரிசன வசதிக்காக அதிகாலை முதல் இரவு வரை இடைவெளியின்றி கோவில் நடை திறந்திருந்ததால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்தனர்.