ஆத்தூர் அருகே, 14 வயது சிறுமி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் சிறுமியின் சகோதரி கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சமி (14). கடந்த 22ம் தேதியன்று இரவு வீட்டில் தாயாருடன் பூக்கட்டிக் கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமியை, வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25) என்ற வாலிபர் கொடுவாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், அவர் மீது கொலை, ஆபாசமாக பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அக். 24ம் தேதியன்று, தினேஷ்குமாரை 15 நாள் விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கை காவல்துறையினர் விரைவாக விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்; தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்டோபர் 31, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டிஒய்எப்ஐ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். சிறுமியைக் கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முழக்கமிட்டனர். மேலும், சாதி ரீதியிலான தாக்குதலை தடுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுமி ராஜலட்சுமியின் சகோதரி அருள்ஜோதி கூறுகையில், ''இந்த வழக்கில் தினேஷ்குமார் மட்டும் குற்றவாளி அல்ல. அவருடைய மனைவி சாரதா, தம்பி சசிகுமார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இதுவரை காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை. அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த கொலை நடந்து பல நாள்கள் ஆன நிலையில், இதுவரை மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை,'' என்றார்.