ஆத்தூர் அருகே, ஆம்னி வேன் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆறு பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 29). இருசக்கர வாகன மெக்கானிக்.
இவர், தன்னுடைய தங்கை ரம்யா (வயது 25), அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகள் சந்தியா (வயது 23) ஆகியோருடன் ஆக. 22- ஆம் தேதி, ஆம்னி வேனில் சேலம் மாவட்டம், ஆத்தூர் லீ பஜாரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
இதையடுத்து ராஜேஷ், சந்தியா, ரம்யா மற்றும் அவர்களின் உறவினர்களான ஆத்தூர் முல்லைவாடியைச் சேர்ந்த சுதாகரின் மனைவி சரண்யா (வயது 23), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் மனைவி சுகன்யா (வயது 27), அவருடைய மகள் தன்ஷிகா (வயது 11) மற்றும் பெரியண்ணன் (வயது 23), புவனேஸ்வரி (வயது 17), கிருஷ்ணவேணி (வயது 45), உதயகுமார் (வயது 17), சுதா (வயது 35) ஆகிய 11 பேரும் தேநீர் குடிப்பதற்காக ஆக. 23- ஆம் தேதி அதிகாலை 02.00 மணியளவில், ஆம்னி வேனில் சென்றனர்.
ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியில், சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துவிட்டு, மீண்டும் துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆத்தூர் சர்வீஸ் சாலையில் செல்வதற்காக அவர்கள் ஆம்னி வேனை சாலையின் குறுக்கே கடந்தபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ராஜேஷ், ரம்யா, சந்தியா, சரண்யா, சுகன்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
பலத்த காயம் அடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 6 பேரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தன்ஷிகா உயிரிழந்தார்.மற்றவர்களுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆக. 24- ஆம் தேதியும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த கோர விபத்து குறித்து ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விபத்துக்குக் காரணமான சொகுசு பேருந்தை ஓட்டி வந்த ஈரோட்டைச் சேர்ந்த முத்துசாமி (வயது 42) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்தின்போது பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா? பேருந்து அவருடைய கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது, ஆம்னி வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.