சேலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, காவல்துறை பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சுவரில் ஏறிக் குதித்தபோது அவருடைய கால் எலும்பு முறிந்தது.
சேலம் ஜான்சன்பேட்டை கண்ணாங்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரதாப் என்கிற சுகேல் (23). பிரபல ரவுடி. இவர் மீது வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரணையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் பிரதாப் மீது சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளான கண்ணன், கஜேந்திரன் ஆகிய இருவரையும் மிரட்டியுள்ளார்.
எனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்வீர்களா? என மிரட்டியதோடு, கத்தியால் அவர்களை வெட்டியுள்ளார். இதில் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், ரவுடி பிரதாப்பை செப். 5ம் தேதி கைது செய்தனர். இருவரை வெட்டுவதற்காக பயன்படுத்திய கத்தி எங்கே என்று காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது பிரதாப், அந்த கத்தியை காக்காயன் சுடுகாடு பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த கத்தியைக் கைப்பற்றுவதற்காக பிரதாப்பை காவல்துறையினர் காக்காயன் சுடுகாடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் திடீரென்று காவல்துறை பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றார். சுவரில் ஏறிக் குதித்தபோது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.