
கோவை, சிங்காநல்லூர் SIHS காலனி, இந்திரா நகர் பகுதியில் கடந்த ஆறு மாதமாக குடியிருப்பவர், சக்தி என்பவரது மனைவி மணிமேகலை வயது 38. தற்போது கணவரைப் பிரிந்து வாழும் அவருக்கு பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்துவருகிறார்.
நேற்று (28.06.2021) பிரபுவுடன் வெளியில் சென்று வீடு திரும்பியபோது திடீரென்று 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைத் தருமாறும், தராவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். மேலும், அவர்களை அடித்து நகை பதினொன்றரை பவுன் மற்றும் பணம் 1,500 எடுத்துக்கொண்டு அவர்களை ரூமிற்குள் பூட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் 4 பேரும் வீட்டில் இருந்த 4 மொபைல் ஃபோன்கள், கார் சாவி, பைக் சாவி ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்குத் தகவல் வர, சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூர் போலீசார் உடனே விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தப்பி ஓடிய 4 கொள்ளையர்களைத் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.