கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் இளுப்பை தோப்பு தெருவில் பழங்குடியினர் (குறவர்) 10 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.
தற்போது வெளிவந்த ‘ஜெய் பீம்’ படத்தின் எதிரொலியின் காரணமாக தமிழ்நாடு முதல்வர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஆய்வுசெய்து அவர்களுக்கு மனைப் பட்டா மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட ஆணை பிறப்பித்தார். அதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ராமதாஸ், பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு வசிக்கும் மக்களின் நிலைமையை அறிந்து குடியிருக்க வேறு இடம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியில் மற்றொரு சமூகத்தினரைச் சேர்ந்த துரைபாண்டியன் என்பவரின் தலைமையில் ராமு, கண்ணையன் உள்ளிட்ட சிலர் இவர்களை மிரட்டி, தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ‘ஏன் எங்க இடத்தில் கழிவுகளைக் கொட்டுகிறீர்கள்’ என வேறுவிதமாக பிரச்சனைகளைத் தூண்டி அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வீடுகளை சூறையாடியுள்ளனர். மேலும், இரும்பு கம்பி மற்றும் கட்டைகளைக் கொண்டு சாதி பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமதி மற்றும் அவரது மகன் ராம்ஜி, உறவினர்கள் அய்யப்பன், 16 வயது சிறுமி உள்ளிட்டோர் படுகாயமடைந்து காட்டுமன்னார்கோயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைகாக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் காவல்துறையினர் ராமு, கண்ணையன் மீது வன்கொடுமை தடுப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் துரைபாண்டியன் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் தேன்மொழி கூறுகையில், “காட்டுமன்னார்கோயில் வட்டப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியினர் உள்ளிட்ட மிகவும் நலிவடைந்த குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான குடிமனைப்பட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், ஓமம்புலியூரில் பழங்குடியினர் வீட்டுமனைப் பட்டா கேட்டதற்காக தாக்குதல் நடத்திய சாதிய வெறியர்களைக் கண்டித்தும் வரும் 29ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.