மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீதும், அவரது கணவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஏத்தகுடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்வரி பன்னீர்செல்வம். மிகச் சிறுவயதில் ஊராட்சி மன்றத் தலைவரானதால் சுறுசுறுப்புடன் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊ.ம.தலைவர் சத்தியமூர்த்தியும் அவரது ஆதரவாளர்கள் அமர்நாத், கோவிந்தராஜ் ஆகியோரும் தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளனர்.
நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற அ.தி.மு.க.வினர், படுத்திருந்த பன்னீர்செல்வத்தைக் கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பன்னீர்செர்வம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிறகு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க.வினருக்கு உதவியாக வழக்கை திசைதிருப்ப முயன்ற தலையாமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அறிவுடைநம்பியைப் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல் அலைகழித்துவரும் காவல்துறையினரை கண்டித்தும் ஏத்தக்குடி ஊராட்சியைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 300க்கு அதிகமானோர் கூடிவந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவில்லையெனில் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏத்தக்குடியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறுகையில், "சின்னவயதில் ஊராட்சி மன்றத் தலைவரானதால் மிக ஆர்வமாக மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கவேண்டியதைச் செய்து கொடுத்துவருகிறார். இது கடந்த முறை ஊராட்சி மன்றத் தலைவருக்கு கோபத்தை உண்டாக்கியபடியே இருந்தது, ஊராட்சி மன்றத் தலைவர் மைனாரிட்டி சமுகத்தைச் சேர்ந்தவர். தாக்கிய அ.தி.மு.க.வினரோ ஆதிக்க சமுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அமைச்சரின் உறவினர் ஒருவர் சமுதாய ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் உதவுகின்றனர். அதனால்தான் மருத்துவமனையில் அடிபட்டு கிடந்த பண்ணீர்செல்வத்திடம் வாக்குமூலம் வாங்கச் சென்ற எஸ்.ஐ., அறிவுடைநம்பியும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடச்சொல்லியும், நாங்க சொல்லுற பெயரை மட்டும் சொல்லு, நீ சொல்லுற பெயரை நாங்க ஏத்துக்கமுடியாது வழக்குப்போட முடியாது, எங்களுக்கு மேலிட பிரஷர் இருக்கு என அவர் கூறியதால்தால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்", என்கிறார்.