நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவரை ஊராட்சி செயலர் உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது விவாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி இருந்த நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.