Skip to main content

மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’: ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி: மு.க.ஸ்டாலின்

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
Stalin



“மத்திய பாஜக ஆட்சிக்கு ‘ஜால்ரா’ போடும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’” என கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  
 

2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஒரு கானல் நீராக அமைந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து எந்தவொரு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கவில்லை. குறிப்பாக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோருடைய முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, 3.5 லட்சம் கோடி கடன் என்று தொடரும் மாநிலத்தின் நிதி நிலைமை, மிகவும் ஸ்தம்பித்துப் போயிருப்பது இந்த பட்ஜெட்டின் மூலம் தெளிவாக தெரியவருகிறது. 
 

அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மையை பொறுத்தவரையில், மிகுந்த மோசமான நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டியால் 9,000 கோடி ரூபாய் இழப்பு வருமென்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அன்றைக்கே எடுத்துச் சொன்னார். இன்றைக்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், ஜிஎஸ்டியால் பயன் விளைந்திருக்கிறது, லாபம் வந்திருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து, மத்தியில் இருக்கின்ற பிஜேபி ஆட்சிக்கு ’ஜால்ரா’ போடும் ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த பட்ஜெட் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்வதென்றால், ‘ஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி’. 
 

செய்தியாளர்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறாரே? 
 

ஸ்டாலின்: ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் 2ஜி வழக்கில் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கிலும், அவர்கள் தவறு செய்யவில்லை, நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு இருப்பது, உள்ளபடியே வரவேற்கத்தக்கது. திமுகழகத்தின் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட களங்கங்கள் எல்லாம், இல்லை என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதை கண்கூடாக இன்றைக்கு நாம் பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்