ஹோட்டலில் ஆர்டர் கொடுத்த உணவை கேன்சல் செய்ததால் ஹோட்டல் ஊழியர்கள் சேர்ந்து வாடிக்கையாளரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாங்குளம் அருகே 'சியாமளா கோனார் மெஸ்' என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் குடும்பத்துடன் முஹம்மது யூசுப் என்பவர் வேனில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த பொழுது இரவு 11 மணி அளவில் மதுரை மாங்குளம் பகுதியில் சியாமளா கோனார் மெஸ்ஸில் சாப்பிடச் சென்றுள்ளனர்.
உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் சட்னி இல்லை என்று கூறியதால் ஆர்டர் செய்த உணவை வேண்டாம் என்று கூறிவிட்டு கிளம்ப முற்பட்டுள்ளார் முஹம்மது யூசுப். அப்போது முகமது யூசுப்பின் கைப்பட்டு டேபிளில் இருந்து தண்ணீர் கீழே கொட்டியது. உடனே அங்கிருந்து ஹோட்டல் ஊழியர்கள் அதைத் துடைத்துவிட்டுப் போகுமாறு சொல்லி உள்ளனர். இதில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மோதல் உருவானது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து முஹம்மது யூசுப் கிளம்பினார். வேனை பின் தொடர்ந்து சென்ற ஹோட்டல் ஊழியர்கள் நான்கு பேர் வேனில் பெண்கள், குழந்தைகள் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வேனை அடித்து நொறுக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஹோட்டல் ஊழியர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.