திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது அத்திக்கடவு அவிநாசி திட்டம். மொத்தம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு விரிவுபடுத்த இந்த திட்டத்தில் தற்போது 1,916 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் 2,000 கன அடி உபரி நீரை சேமித்து திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்பி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 145 குளங்கள் மற்றும் குட்டைகள் நீர் ஆதாரம் பெறும்.
இதன் மூலம் 50 லட்சம் மக்கள் பயனடைவர். இதன் அடிப்படை நோக்கமாக விவசாயத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவையாக உள்ளது.