தமிழகத்தில், கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற்றது. இதில், 2011 ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஆர். வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2015 - 2016 காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மட்டுமில்லாது அவரது இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, மீது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1058% அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுக்குமாடிக் குடியிருப்பு அனுமதிக்கு ரூ. 28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.