விழுப்புரம் மேல்மலையனூர் பகுதியில் பரோட்டா கடையில் ஓசியில் பரோட்டா தராததால், திமுக பிரமுகர் ஒருவர் கடை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகி மற்றும் அவருடைய கூட்டாளி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே முனீஸ்வரன் செட்டிநாடு என்ற உணவகம் இருக்கிறது. சரவணன் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், மேல் மலையனூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆசைத்தம்பி என்பவர் அவருடைய நண்பர் சிவராஜ் என்பவருடன் நேற்று உணவகத்திற்கு வந்து காசு இல்லாமல் பரோட்டா கேட்டிருக்கிறார். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உரிமையாளர் எதுவும் கூறாமல் அவருக்கு 100 ரூபாய் பெறுமானமுள்ள பரோட்டாவை கொடுத்திருக்கிறார். அதை வாங்கிச் சென்ற ஆசைத்தம்பி சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே ஹோட்டலுக்கு வந்து பரோட்டா கேட்டிருக்கிறார்.
அப்பொழுது, முதலில் கேட்டதற்கே மதித்து பரோட்டா கொடுத்தேன். மீண்டும் கேட்டால் எப்படி என்று முடியாது என சரவணன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி மற்றும் கூட்டாளி சிவராஜ் சேர்ந்து, 'எங்களுக்கு பரோட்டா தராமல் எங்கள் ஊரில் எப்படி கடை நடத்த முடியும் என்று பார்க்கிறேன்' என அங்கிருந்த ஊழியர்கள், கடையில் இருந்தவர்கள் என அனைவரையும் கொடூரமாகத் தாக்கினர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் சரவணன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிசிடிவி பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு திமுக பிரமுகர் ஆசைத்தம்பி, ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.