
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட இடையன்காட்டு வலசு பகுதியில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 19 ந் தேதி ஈரோட்டில் பரப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசும்போது, "சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக 517 வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் வெறும் 49 தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூலம் வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகம். திமுக அளித்த வாக்குறுதிப்படி, மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை என்றால், 22 மாதத்திற்கு 22 ஆயிரம் தர வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒன்றுக்கு ரூபாய் 100 மானியம் தருவதாக கூறினார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 1.21 லட்சம் பேர் சமையல் எரிவாயு பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு 22 மாதத்திற்கு ரூபாய் 2,200 வழங்க வேண்டும். எனவே, உங்களிடம் வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் 24 ஆயிரத்து 200 கொடுக்க வேண்டும் என கேளுங்கள். அதோடு, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேறும்.
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து, தமிழக அரசியலை 1950- 60 காலகட்டத்திற்கு திமுக எடுத்துச் சென்றுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடக்கவில்லை. இங்கு முகாமிட்டுள்ள 30 அமைச்சர்களும், வரும் 27-ம் தேதி வரை மட்டுமே வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். அதன்பின், அவர்கள் ஓடி விடுவார்கள். ஆனால், அதிமுக சார்பில் இருமுறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதேபகுதியில் இருசக்கர வாகனத்தில் எளிமையோடு உங்களைச் சுற்றி வருவார். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் சென்னையில் தான் இருப்பார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 1200 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 22 மாத கால திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது. இப்படி தடம்புரண்டு செல்லும் ஆட்சியை சரிசெய்ய, ஒரு பெரிய மணியாக இந்த இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும். திருமங்கலம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களால் இந்திய அளவில் தமிழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் தீங்கான செயல்களால், இப்பகுதி மக்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்.
இது எப்போதும் நமக்கு வேண்டாம். நாம் நல்லவர்களுக்கு வாக்களிப்போம். கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்த திமுக தொண்டர்களுக்காக, அந்த கடைக்கு சென்று ஸ்டாலின் மன்னிப்பு கோரினார். தற்போது, கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் ஒருவரால், ராணுவ வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நாட்டை காக்கும் ராணுவ வீரர் கொல்லப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.
கொப்பரை தேங்காய், தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலையும், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு கூட இதுவரை வெளியாகவில்லை" என்றார்.