தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தொண்டன் சுப்பிரமணி. இவர் தொண்டர் இயக்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். திங்கள்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகம் முன்பு கழிப்பறை காணவில்லை என்ற பதாகையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டடார்.
பின்னர் அவர் நம்மிடம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுக்கா, ஆறுமுகநேரி பேரூராட்சி மெயின் பஜாரில் பொதுக்கழிப்பறை ஒன்று இருந்தது. கழிவறை இருந்த இடம் பேரூராட்சிக்கு சொந்தமானது. பொதுக் கழிப்பறை இருந்த இடத்தை ஆக்கிரமித்து 37 கடைகள் உள்ள வணிக வளாகத்தைத் கட்டியுள்ளனர். இதற்கு அனுமதி கொடுப்பதற்கான அதிகாரம் அந்தப் பஞ்சாயத்து அதிகாரிக்கு இல்லை.
வீடு கட்டுவதற்கு நாலாயிரம் சதுர அடியும், வணிக வளாகம் கட்ட இரண்டாயிரம் சதுர அடியும் அனுமதி கொடுக்கத்தான் அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அவர் இந்த வணிக வளாகம் கட்ட அனுமதி கொடுத்துள்ளார். 37 கடைகள் உள்ள இந்த வணிக வளாகத்திற்கு மாவட்ட அதிகாரிதான் அனுமதி அளிக்க வேண்டும்.
பொதுக்கழிப்பறை உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுக்கழிப்பறை பொதுமக்களுக்குத் தேவை என மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்தோம். தனிப் பிரிவு அதிகாரி எங்கள் மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.