சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பான மேலும் 10 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கியில் காவலில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த இந்த சம்பவத்தில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் முன்னதாக 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவர்கள் திட்டமிட்டு இதைச் செய்தால் பெரிய விஷயமாக ஆகாது என நினைத்து செய்துள்ளார்கள். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை பின் இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் வெளிவரும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க தனிப்படையானது கோவை விரைந்த நிலையில் சூர்யா கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விழுப்புரத்தில் சூர்யாவின் நண்பனிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இந்த சம்பவத்தில் மொத்தம் கொள்ளை போன 32 கிலோ நகையில் 28 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.