அரும்பாக்கம் வங்கி கொள்ளை குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'பெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த பிறகு வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் முருகனை தேடி வந்த நிலையில், அவரது உறவினர் பாலாஜி, முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நேற்று தமிழக டிஜிபி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அப்படி தகவல் கொடுக்கும் பட்சத்தில் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.