சென்னையை மையமாகக் கொண்டுள்ள ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கிளை அமைத்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்தது. அப்போது இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 2 ஆயிரத்து 438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம் உறுதியளித்தபடி நடந்துகொள்ளாமல் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய மோசடி செய்தது.
இந்நிலையில், ஆருத்ரா நிறுவனம் மீது தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி ஆகிய பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவராக இருந்தவர் நாகராஜ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜெம் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் - சுகுணா தேவி என்ற வயதான தம்பதியின் வீட்டை ரூ. 26 லட்சத்திற்கு தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதில் ரூ. 6 லட்சத்தை ஸ்டீபனின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ. 20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து, 20 லட்ச ரூபாய் முதலீடு செய்த தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் தவணை பணம் கொடுத்துள்ளார். அதன்பிறகு, 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆருத்ரா மோசடி அம்பலமாகி வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த நாகராஜ் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய சூழலில், தற்போது ஜாமீனில் வெளிவந்த நாகராஜ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிவிக்காமல் தன்னுடைய சொத்துகளை விற்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், ஸ்டீபன் - சுகுணா தேவி தம்பதியின் வீட்டை அபகரிப்பதற்காக தன்னுடைய அடியாட்களை அனுப்பி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்ற நாகராஜின் அடியாட்கள் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி அராஜகம் செய்துள்ளனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசிவிட்டு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அதே சமயம், ஆருத்ரா முகவர் முதியவரின் வீட்டை காலி செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா போலீசார், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட நாகராஜை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். பட்டப்பகல் நேரத்தில் நடந்த இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.