இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 55). இவர் சில ஆண்டுக்கு முன்பாக மாடிப்படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும் மூட்டு வலி தீர்வு ஏற்ப்படவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பாக வலி அதிகமான நிலையில் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன், அவரை பரிசோதித்துவிட்டு அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மேலும் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதுபற்றி மருத்துவர் ஜவாஹிர் உசேன் கூறியதாவது, "பூங்கொடி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மூட்டுவலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை பரிசோதித்ததில் மூட்டு மிகவும் மோசமடைந்திருந்தது. இதையடுத்து அவரை தைரியப்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற்று மூட்டு மாற்று சிகிச்சையை முட நீக்கியல் நிபுணர் மருத்துவர்கள் பிரபாகரன், ஆதித்யா தாகூர், மனோஜ்குமார், மயக்கவியல் நிபுணர் ராஜேஸ்வரன் மற்றும் செவிலியர் ஆனந்தி மற்றும் ஜெயராணி ஆகிய மருத்துவ குழுவினருடன் இணைந்து சுமார் நான்கு மணிநேரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. தற்சமயம் அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீட்டிற்க்கு செல்லவுள்ளார். இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
கீழக்கரை மருத்துவர்களைப் பாராட்டிய நகர்மன்றத் தலைவர்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சின்னமாயாகுளத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார். இது பல்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பரவியது. இதையடுத்து இன்று கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் கவுன்சிலர்கள், முகம்மது பாதுஷா, முகம்மது ஹாஜா சுஐபு, சூரியகலா, பைரோஸ் பாத்திமா, உம்முல் சல்மா பீவி, காயத்திரி, முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது, தோழர் மகாலிங்கம் ஆகியோர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன், முட நீக்கியல் மருத்துவர் பிரபாகரன், ஆதித்யா தாகூர், மனோஜ்குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர் ராஜேஸ்வரன் மற்றும் ஆனந்தி, ஜெயராணி உள்ளிட்ட மருத்துவ குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பூங்கொடி அவர்களை நலம் விசாரித்து போதுமான உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். இதுபற்றி நகர்மன்றத் தலைவி கூறியதாவது, "கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பல்வேறு கிராமபுற மக்கள் மற்றும் நகர்புற மக்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்துவது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். நாம் இதுபற்றி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சாமுத்துராமலிங்கத்திடம் தெரியப்படுத்த உள்ளோம். விரைவாக தரம் உயர்த்தபடும்" என்றார்.