உண்ணாமுலையம்மனுக்கு தனது உடலில் இடதுபாகத்தை தந்து ஆணும்–பெண்ணும் சரிசமம் என்பதை உலகுக்கு உணர்த்தவே அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவருக்கு அண்ணாமலையார் கோயிலுக்குள் ஒரு சன்னதி உள்ளது.
இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள தனது சன்னதியில் இருந்து வெளியே வந்து தங்ககொடிமரம் முன்பு நின்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அர்த்தநாரீஸ்வரர். அவர் வெளியே வருவது மகாதீபம் நாளன்று மட்டுமே. அவர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும்போது, கொடிமரத்தின் அருகே அகலமான கொப்பறையில் தீபம் ஏற்றப்படும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். சரியாக 2 நிமிடம் பக்தர்களுக்கு காட்சியளித்துவிட்டு மீண்டும் கோயிலுக்குள் தனது சன்னதிக்குள் சென்றுவிடுவார்.
ஆண்டுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கவே ஆட்சியாளர்களும், பெரிய அதிகாரிகளும், வசதி படைத்தவர்களும் விரும்புவர். அதனாலயே ஒவ்வொரு ஆண்டும் வசதி படைத்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதை கவுரவமாக நினைக்கின்றனர்.
இதனாலயே தீபத்தன்று கோயிலுக்குள் சாமி தரிசனம் என்பது வசதி, அதிகாரம் படைத்தவர்களுக்கானதாக உள்ளது.