ஏற்காட்டில், தனியார் பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய விவகாரத்தில் அமமுக கட்சிப் பிரமுகரின் பேரன்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிரபலமான மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பள்ளி சார்பில் நிதி திரட்டப்படும். அதன்படி, இந்தப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆண்டுவிழாவின் போது பிரமாண்ட கேக் ஏலம் விடப்பட்டது. அந்த கேக்கை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.
இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் அவனது நண்பர்களை 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவன், தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது கூட்டாளிகளுடன் ஆகஸ்ட் 7ம் தேதி மான்ட்போர்டு பள்ளி விடுதிக்குள் புகுந்து, தனது தம்பியைத் தாக்கிய பிளஸ்2 மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் ஏற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த அமமுக பிரமுகர் ஒருவரின் பேரன் மாணிக்க ராஜா மற்றும் அவருடைய கூட்டாளிகள் தான் பள்ளி விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாகத் தேடி வந்தனர். முதல்கட்டமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவண ஐயப்பன் (22), பொன்.கணேஷ் (21), மகாராஜா (24), துரைராஜ் (23), கடம்பூரைச் சேர்ந்த ஐயனார் (21) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமமுக பிரமுகர் ஒருவரின் பேரனான மாணிக்க ராஜா என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தனிப்படை காவல்துறை தீவிர தேடுதலில், நெல்லை - தூத்துக்குடி சாலையில் உள்ள அம்மநாயக்கனூர் பகுதியில் மாணிக்க ராஜா பதுங்கி இருப்பது தெரிய வந்தது. ஆக. 31ம் தேதி, அங்கு விரைந்த காவல்துறையினர் அமமுக பிரமுகரின் பேரன்களான சிவக்குமார் மகன் மாணிக்க ராஜா (20), ஜே.எஸ்.ராஜா மகன் கார்த்திக் ராஜா என்கிற மாணிக்க ராஜா (23) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இருவரையும் ஏற்காடு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “எங்களுடைய தம்பியை மற்ற மாணவர்கள் தாக்கியது குறித்து தகவல் அறிந்ததும், நெல்லையில் இருந்து 8 பேரும், சென்னையில் இருந்து 6 பேரும் ஏற்காடு மான்ட்போர்டு பள்ளிக்கு வந்தோம். பள்ளி விடுதிக்குச் சென்று தம்பியைத் தாக்கிய மாணவர்களைத் தட்டிக் கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட நபர்களிடம் இருந்து, ஒரு சொகுசு காரையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் மாணிக்கராஜா, தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பிடிபட்ட இருவரும் ஏற்காடு நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர்.