கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. நேற்று இரவு மதுரையிலும் அதேபோல் குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''பல்வேறு படைப்பிரிவுகள், லோக்கல் போலீஸ், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ், கமாண்டர் ஃபோர்ஸ், ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ், ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடைசி சம்பவம் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்துள்ளது. அதில் இப்பொழுது 2 குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறோம். அதன் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. ஏற்கனவே பல்வேறு மதத்தினை சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி இருக்கின்றோம். அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றார்கள். ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். கோவை மாநகரம் அமைதியாக இருக்கிறது. பதற்றம் எதுவும் இல்லை. பதிவு செய்த மீதமுள்ள வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.