கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ் மற்றும் எ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பெயரில் தேசிய வங்கிகளில் ரூ 200 கோடியை மோசடியாக கடன் பெற்ற உரிமையாளர் ராம்.வி.தியாகராஜன் மற்றும் பொது மேலாளர்கள் உடந்தையாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரியும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், ராம் தியாகராஜன் சொத்துக்களை பறிமுதல் செய்து கரும்பு விவசாயிகளை வங்கிக் கடன் தொல்லைகளிலிருந்து அரசு பாதுகாத்திடக் கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக விருத்தாசலத்தில் போராட்டம் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ் மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்துதல், 2017 -2018 ஆம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த விலையான (FRP) தொகை ரூ 82 கோடியை வட்டியுடன் வழங்குதல், 2013 முதல் 2017 வரை மாநில அரசு அறிவித்துள்ள SAP 122 கோடியை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுத்தல், ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்தல், ஆலைக்கு கரும்பு ஏற்றிவந்த வாகன வாடகை கொடுக்காமல் பல கோடிகளை ஏமாற்றி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வாகன வாடகையை உரிமையாளர்களுக்கு வழங்கல், கரும்பு விவசாயிகளுக்கு வங்கி மூலம் நோட்டீஸ், வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பும் ஆரூரான் குரூப்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், சர்க்கரை ஆலைகளிலுள்ள விலை உயர்ந்த மரங்களை திருட்டுத்தனமாக விற்கும் அதிகாரிகளை கண்டித்தும், உரலோனில் பல கோடிகளை கையாடல் செய்து வெளிநாடு சென்ற பொது மேலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்திட கோரியும் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் உழவர் சந்தையிலிருந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கைகளில் கரும்பு மற்றும் கருப்பு கொடி ஏந்தியபடி ஊர்வலமாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர்.
அப்போது 50 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்பு, அங்கு வந்த சார் ஆட்சியர் பிரசாந்த் விவசாயிகளிடத்தில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் ஆவேசமடைந்த விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.