அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி அரசு மருத்துவமனைக்கு வந்த அரியலூரை சேர்ந்த டிக்டாக் இளம்பெண் பூஜாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தபோது, இவர் செய்த டிக்டாக் பிரபலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில், டிக் டாக் உள்ளிட்ட இந்த செயலிகளால் சமூக சீர்கேடுகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏற்கனவே தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் சுகாதார துறை மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து வந்தார். இதனை தற்போது தடை செய்திருப்பது சந்தோஷமே.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள் என்று கூறினார். இளைஞர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இந்த டிக்டாக்கை தூக்கி எறியுங்கள். கரோனா கூடவே வாழ பழகிகொண்ட நமக்கு டிக்டாக் இல்லாமலும் பழகி கொள்ள முடியும்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையை கரோனா பழிவாங்கி கொண்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை எப்படி இருக்கபோகிறது என்றே தெரியவில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் டிக்டாக் தேவை இல்லை. நமக்கு நமது நாடு முக்கியமா, சீன செயலிகள் முக்கியமா என்று பார்க்கும்போது, நமது நாடுதான் முக்கியம். சீன செயலிகளை தவிர்த்து நமது இந்திய மற்றும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்தி நமது திறமைகளை காட்டுவோம். நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் உயிரையே தியாகம் செய்கிறார்கள். நாம் இந்த செயலியை தியாகம் செய்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.