சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன் (வயது 33). இவர் அசாம் ரைஃபிள் பிரிவில் பணியாற்றிவருகிறார். இவர் 197 நாடுகளின் தேசிய கொடியை சைக்கிளில் கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து அயோத்திவரை 2,800 கிலோ மீட்டர் நடை பயணமாக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி புறப்பட்டார்.
கரோனா அதிகரித்த காலத்தில் தன் உயிரையும், பணயம் வைத்து கரோனாவைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்ட அனைத்து நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசுத்துறையினர் என அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த நடைப்பயணத்தை துவங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (19.11.21) காலை 10.30 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களையும் நினைவுகூரும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியும், மனித இனத்தைக் காக்க கோவிட் - 19 தடுப்பூசி அவசியம் மற்றும் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்கிறேன்” என கூறினார்.
திருச்சி மாவட்டத்திற்கு வந்த அவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், சிலம்பம் அரவிந்த், தண்ணீர் அமைப்புச் செயலாளர் பேராசிரியர் கி. சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா மற்றும் ரெக்கார்டர் ஜெட்லி ஆகியோர் திருச்சி காவேரி பாலம் அருகில் காலை 10.30 மணியவில் வரவேற்று பொன்னாடை அணிவித்து பயணம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பிவைத்தார்கள்.