பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை கடந்த 20 ஆம் தேதி (20.07.2024) கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையும், ஆம்ஸ்ட்ராங் எதிரிகளை ஒருங்கிணைத்ததாக ஹரிதரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து செம்பியம் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ரூ.50 லட்சம் பணம் யாரிடம் இருந்து வந்தது?. எங்கெங்கு ரவுடிகள் சந்திப்பு நடந்தது?. வேறு யாருக்கு எல்லாம் இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது?. என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான ஆலோசனையை அவ்வப்போது சம்போ செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வடகிழக்கு மாநிலங்களில் சம்போ செந்தில் எங்கெங்கு தங்குவார் எனவும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சம்போ செந்திலுக்கும், ஹரிஹரனுக்கும் உள்ள பத்தாண்டு கால தொடர்பு குறித்தும் போலீசார் விசாரித்துள்ளனர்.