அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வின் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு இரங்கல் தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "அரியலூர் நகரில் இரயில்நிலையம் அருகே வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியினரின் மகள் மாணவி நிஷாந்தினி. இவர் கடந்த ஆண்டு நடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் நீட் தேர்வுக்கு கடினமாக இருப்பதாகவும், தமது தந்தை இனி வெளிநாட்டில் கஷ்டப்படாமல் ஊரிலேயே வந்து தங்கி இருக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மருத்துவக் கனவு தகர்ந்து போனதால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி நிஷாந்தினி அவர்களின் மறைவு பெரும் துயரத்தை தருகிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற செயலை வேறு எந்த மாணவர்களும் எடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எத்தனைப் பேர் மரணித்தாலும் நீட் எனும் அரக்கனை தொடர்வோம் என பிடிவாதம் பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசும் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு இன்னும் கூடுதல் முயற்சியை துரிதமாக செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.