அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பள்ளியில் பயின்ற மாணவர்களிடமிருந்து மதம் சார்பாக புகார்கள் இதுவரை பெறப்படவில்லை. தொடர் விடுமுறைகளின் போதும்கூட மற்ற மாணவிகள் சொந்த ஊருக்குச் செல்லும் பொழுதும் சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே இருப்பார். ஜனவரி 10ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரச்சாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.