ஈரோட்டிலிருந்து உயிர்க் கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை எம்.ஜி.ஆர் என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் இந்த லாரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலை கர்ணாவூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரியின் டயர் வெடித்து பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் லாரி டிரைவர் லாரியை சாலையின் நடு மையத்தில் உள்ள சென்டர் மீடியன் ஓரமாக நிறுத்தி, டிரைவரும் கிளீயினரும் வெடித்த டயரை கழற்றி மாற்றிக் கொண்டு இருந்தனர்.
மதுரையிலிருந்து அதே திசையில் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த அரசு விரைவு பேருந்து சாலையோரம் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்த லாரி டிரைவர் எம்.ஜி.ஆர், கிளீனர் சண்முகம் ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் லாரி டிரைவர், கிளீனர் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தூத்துக்குடி எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் அரசுப் பேருந்தை ஒட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிவேகமாக வந்த அரசு பேருந்து, லாரி மீது மோதி சாலையோர பள்ளத்தில் நின்றது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அதிகாலை நடந்த விபத்தினால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திண்டிவனம் அருகே நடந்த இந்தவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.