ஜூலை 27இல் தமிழகம் முழுவதும் மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அரியலூரில் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கட்டடத்தில் அரியலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வாரணவாசி ராசேந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், காவேரி டெல்டா பாசன விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க. தர்மராஜன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் இளங்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க தலைவர் செங்கமுத்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணியன், பொன்னாறு விவசாயிகள் சங்கம் தலைவர் நத்தவெளி ஜெகநாதன், பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார வரைவு திருத்தச்சட்டம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும்.
- மேலும் ‘அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020’, ‘வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020’, ‘விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் & வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020’ ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
- இதனை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் ஜூலை 27 அனைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தின் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்திலும் அப்போரட்டம் நடத்தப்படும்.
- அரியலூரில் ஜூலை 20இல் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் சார்பில் 2 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கப்படும்.
- கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் வழங்குவதில்லை என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.