அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி- நல்லாம்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த நீர் வழித்தடம் மற்றும் நடைப் பாதைகளை சிமெண்டு ஆலை நிர்வாகங்கள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து லாரிகள் செல்ல பாதை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வுக்கு வந்த மத்திய நீர்வள ஆய்வு விஞ்ஞானி ஆய்வு செய்து அனுமதியின்றி சிமெண்ட் ஆலை நிர்வாகங்கள் எப்படி இந்தப் பாதையை ஆக்கிரமித்து லாரிகளை இயக்கலாம் என்று கேள்வி எழுப்பிய நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன் நல்லாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிரடியாக சிமெண்ட் ஆலை லாரி நிர்வாகங்கள் அனுமதியின்றி திருட்டுத்தனமாகப் பாதை அமைத்து லாரிகளை இயக்கி வந்த பாதைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் துண்டித்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.