அரியலூர் மாவட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், ஆலையிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் கனரக வாகனங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக இயக்கப்படும் கனரக வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மூலமும், அவ்வப்போது அந்த வாகனங்களிலேயே வெளிமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் ஆலை பணியாளர்கள் மூலமும் கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும், கடந்த 22ஆம் தேதி இந்தியா முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர். ஆனால், அரியலூரில் செயல்படும் சிமெண்ட் ஆலைகள் சிமெண்ட் உற்பத்தியையோ, உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றிச்செல்லும் பணியையோ நிறுத்தவில்லை. தொழிலாளர்களை ஆலைக்கு வரவழைத்து அவர்கள் மூலம் 22.03.2020 அன்று காலையில் சிமெண்ட் மூட்டைகளை சரக்கு லாரிகளில் ஏற்றி, அவற்றை ஆலையிலிருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைத்ததை நாம் நேரடியாகப் பார்த்தோம். இப்படி அரசு உத்தரவையும், கரோனா பரவாமல் தடுக்க வேண்டிய அவசியத்தையும், கரோனா ஏற்படுத்தும் பாதிப்புகளையும் உணராமல் சிமெண்ட் ஆலைகள் தங்களின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக ஆட்சியாளர்களுக்கும் பல்வேறு புகார்களை அனுப்பி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 31-ஆம் தேதி வரை அனைத்து விதமான உற்பத்தி மற்றும் போக்குவரத்தை மாருதி கார் கம்பனி உட்பட பல்வேறு நிறுவனங்கள் நிறுத்தியுள்ளனர். இருப்பினும், அரசின் உத்தரவை கூட இந்த சிமெண்ட் ஆலைகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று (23.03.2020) அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. இரத்தினா, மார்ச் 31ம் தேதி வரை சிமெண்ட் ஆலைகள் உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையும் அந்த சிமெண்ட் ஆலை நிர்வாகிகள் கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரியலூர் மாவட்ட மக்கள்.