அரியலூர் தொகுதியின் எம்.எல்.ஏ. தாமரை, அரசு கொறடாவாகவும் இருக்கிறார். ராஜேந்திரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து சென்று சிறப்பு வரவேற்பு அளித்தனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் ஊர்வலமாக சென்றதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க பிரமுகரான அரியலூர் காந்தியார் தெருவை சேர்ந்த டென்சி என்கிற செல்வக்குமார், அரசு கொறடா ஊர்வலமாக சென்றபோது அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ஆத்திரமடைந்த அ.தி.மு.க அரியலூர் நகர செயலாளர் ஏ.பி.செந்தில், எழுத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவா, மணிச்சந்திரன் உள்ளிட்ட தாமரை. ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் 25க்கும் மேற்ப்பட்டோர் நேற்று இரவு, 11.30 மணியளவில் செல்வகுமார் வீட்டிற்கு குடிபோதையில் சென்று கற்கள், மதுபாட்டில்கள், கத்தி, கம்பி, உருட்டுக் கட்டைகளை வீசி எறிந்து கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள், வீட்டின் சுவர் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து செல்வகுமாரையும் அவரது மனைவி ராதாவையும் தகாத வார்த்தையில் பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் காயமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அவரது குழந்தைகள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த செல்வகுமாரின் வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தி.மு.க பிரமுகர் மீது அரசு கொறடாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் ஈடுபட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’
இதுகுறித்து திமுக அரியலூர் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவிக்கையில், “செல்வக்குமார், காவல்துறையிடம் தான் எதும் அவர்களை பேசவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அப்படியே அவர்களுக்கு சந்தேகமாக இருந்திருந்தாலும், காவல்துறையில் புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, குண்டர்களை கொண்டு அதுவும் இரவு நேரத்தில் அவரது மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கும்போது அத்துமீறி தாக்கியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில், மாவட்ட திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். சட்ட ஒழுங்கு கடைபிடிக்காமல் அதிமுகவினர் நடந்துகொண்டதும் அதற்கு அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் இருப்பதும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.