கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் மக்களை துன்புறுத்தி வந்த அரிசி ராஜா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது லாரியில் ஏற்றப்பட்டது.
கோவை பொள்ளாச்சி அருகே அரிசி ராஜா என்ற யானை தாக்கியதில் நவமலை, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரிசிராஜாவை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானையை பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டது.
பருத்தியூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அரிசிராஜாவுக்கு வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர்.
அரிசிராஜா மயக்கமடைந்த நிலையில் மற்ற பகுதிகளில் நின்று கொண்டு இருந்த வனக்குழுவினரை உடனடியாக ஒரே இடத்திற்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி இரவு நேரத்தில் வெளியே வந்தபோது காட்டு யானை அரிசிராஜா சிக்கியது.
காட்டு யானை அரிசிராஜாவை சமதள பரப்பிற்கு கும்கி யானை கலீம் மூலம் இழுத்து வரப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த காட்டு யானை அரிசி ராஜா கும்கி யானை கலீமுடன் ஒத்துழைக்க மறுத்து ஆவேசமாக மோதியது.
கும்கி யானை கலீம் , காட்டு யானை அரிசிராஜாவை முட்டியதுடன் சமதள பரப்பிற்கு இழுத்து வந்தது. மூன்று நாட்களாக இப்படி போக்குக் காட்டி வந்த அரிசி ராஜா யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டு வனத்துறையினரால் வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.