வேலூரில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறி வீடியோ எடுத்த சம்பவத்தில் ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று வேலூர் கோட்டை. தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், கடந்த 22 ஆம் தேதி ஹிஜாப் உடையுடன் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த பெண்ணிடம் வேலூர் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆண் நண்பர்களுடன் வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்து அதனை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக 20 பேரிடம் விசாரணை செய்து, அதில் ஏழு பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.