தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை எனும் கிராமம் உள்ளது. இக்கிரமத்தின் கரைமேட்டுத் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவனை இழந்த செல்வமணிக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.
செல்வமணியின் மூத்த மகள் கீதா சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து மாதாமாதம் தாய்க்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், கீதாவின் மகள் ஜெயலட்சுமி பாட்டி செல்வமணியைக் காணச் சென்றுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டினுள் சென்றுள்ளார். வீட்டில் பாட்டியைத் தேடிய போது, அவர் வீட்டில் இருந்த பாத்திரத்தில் தலைகீழாகத் திணிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினர் உயிரிழந்த செல்வமணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ஜெயலட்சுமியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலட்சுமியை தொடர்ந்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
மூத்த மகள் கீதா செல்வமணிக்கு அனுப்பும் பணத்தை கீதாவின் மகள் ஜெயலட்சுமி அடிக்கடி வந்து வாங்கிச் செல்வது வழக்கமாம். சம்பவத்தன்று ஜெயலட்சுமி வந்து பணம் கேட்ட பொழுது செல்வமணி தர மறுத்ததால் அவரை ஜெயலட்சுமி தள்ளிவிட்டுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செல்வமணியை வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தில் தலைகீழாகத் திணித்துள்ளார். தொடர்ந்து வீட்டினை உள்பக்கமாக பூட்டிவிட்டு பின் வாசல் வழியாகச் சென்ற ஜெயலட்சுமி மறுநாள் வழக்கமாக வருவது போல் வந்து கதவினைத் தட்டியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பாட்டியைத் தேடுவது போல் நடித்துள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்த பாபநாசம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பணம் தரவில்லை என்பதற்காக பாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் அடைத்த பேத்தியின் செயல் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.