நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.