தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்புகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லானி அரசுப்பள்ளிகளில் மிகச்சிறப்பாக தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து, இன்று அந்த மாணவர்கள் பழமையான தமிழி, வட்டெழுத்து போன்ற தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் கட்டிடக்கலைப் பற்றியும், அறிந்து ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.
இதேபோல, சில அரசுப் பள்ளிகளில் மட்டுமே தொன்மைப் பாதுகாப்பு மன்றம் உயிர்ப்போடு உள்ளது. இந்த மன்றங்களை ஒவ்வொரு பள்ளியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும், மாணவர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வாளர்களான ஆசிரியர்கள் ராஜகுரு, மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அந்த நல்ல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணகண்டன் கூறும்போது, "தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் தொல்லியல் தலங்களின் சிறப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு, தொல்லியல் துறை வாயிலாக 1,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி அளிப்பதற்கான முன்மொழிவினை பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதற்காக உரிய பரிந்துரைகளை செய்த தொல்லியல் துறை மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.