சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில்(சிற்றம்பல மேடை) ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இதற்கு கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு ஆன்மீக அமைப்புகள் உள்ளிட்டவைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையெடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தினமும் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த பல புகார்கள் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் கனகசபை தரிசனம் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் கண்காணிக்க கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜோதி, இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஒரத்தூர், மார்க்கசகாயீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார், இன்று (அக்.13) கொஞ்சிக்குப்பம், அய்யனார், விநாயகர், மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் வேல்விழி, நாளை (அக்.14), ஆய்வர் நரசிங்கப்பெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறப்புப் பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு) ஜோதி தெரிவித்தார்.