தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.
கரோனா ஊரடங்கு காரணத்தால் 10, 11, 12ஆம் வகுப்புகளின் செய்முறை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு 12ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை என கருதும் மாணவர்கள் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் தேர்வெழுத விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.