முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். டிடிவி.தினகரன் அமமுக எனும் புதிய கட்சியை தொடங்கிய நிலையில் இந்த வழக்கை விட்டு, அவர் விலகினார். தற்பொழுது வரை இந்த வழக்கை சசிகலா நடத்திவருகிறார். தற்போதைய அதிமுக தலைமையில் அங்கம் வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சசிகலாவின் மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் மனு மீது இன்று இந்த வழக்கில் 'அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்த சசிகலா முதலாவதாக சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள உத்தமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டு தற்போது திருவாச்சூர் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இன்று நாமக்கல் வழியாக சேலம் எடப்பாடி வரை உள்ள கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.