
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி அக்கட்சியின் நிர்வாகி ஜெயச்சந்திரன் என்பவர் சார்பில் வழக்கறிஞர் பிரசாத் இன்று (06/12/2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு இரண்டு பேர் மட்டுமே மனு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் தமது முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி தலைமையிலான அமர்வு, "முறைப்படி மனு செய்யாமல் எப்படி விசாரிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “மனுவாக தாக்கல் செய்து பதிவுத்துறை நடைமுறை முடிந்தால் மனு விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடரவிருப்பதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.
ஏற்கனவே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமி, அதிமுக தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.