செங்கல்பட்டில் மதுபானக் கடையில் மது வாங்க வந்தவர்களை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள அன்னபுரம் பகுதியில் ஊர் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடை முன்பு கூடிய குடிமகன்கள் மது பாட்டிலை அதிகப்படியாக வாங்கிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியதால் போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்தனர்.
அப்பொழுது குடிமகன் ஒருவர் 'என்னங்க ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறாங்க.. காசு என்ன சும்மாவா வருது' என்று புலம்பிக் கொண்டிருக்க அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் 'எல்லாரும் போகச் சொன்னா போறாங்க. நீ மட்டும் போகமாட்டியா' என அவரை தாறுமாறாகத் தாக்கினார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் காவல் உதவி ஆய்வாளர் ராஜா என்பது தெரியவந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல் உதவி ஆய்வாளரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்கிய ஊழியர் ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு கடையின் மேற்பார்வையாளர் பிரபாகரன் வேறு கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.