உலகத்தில் மிகப்பெரிய கொடுமை எது வென்றால் ஒருவனின் திறமையை அங்கீகரிக்காமல் இருப்பதும், அதை புறக்கணிப்பதும்தான். முன்பெல்லாம் திறமையை வெளிப்படுத்துவது என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. கடைகோடியில் வாழும் சாமானியனுக்கு அது எட்டா கனியாகவே தோன்றியது.
ஆனால் மக்கள் சமூகத்தின் மீது சமூகவலைதளம் ஏற்படுத்திய தாக்கம் அதை உடைத்தெரிந்தது. வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அடித்தட்டில் வாழும் திறமையாளர்களின் மீது வெளிச்சம் பட்டது. அப்படித்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி, டி.இமான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றார். ரயில்களில் பாடி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரானு மரியா மோன்டல் புகழின் உச்சிக்கு சென்றார்.
இதேபோல் கர்நாடகவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாடும் பாப் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் ஹேர், தனது டிவிட்டரில் பதிவிட்டு, "கர்நாடகாவை சேர்ந்த இந்த விவசாயிக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாது என்று உறுதியாக தெரிகிறது. ஆனால் அவர் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை பாடும் முறையும், மனநிலையும் ஆர்வத்தோடு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதை அனுபவபூர்வமாக வெளிகாட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.