தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளராக மீண்டும் பணியில் இணைந்துள்ளார் அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்.
முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் இந்த 4 செயலாளர்களும் தான் முதல்வரின் நேரடி தொடர்பில் தினமும் இருப்பவர்கள். தமிழக அரசில் மிக முக்கியமாக 45 துறைகள் இருக்கின்றன. அந்த 45 துறைகளும் இந்த 4 அதிகாரிகளுக்கும் பிரித்து தரப்பட்டது.
அந்த வகையில், முதல் 3 செயலாளர்களுக்கும் தலா 11 துறைகளும், அனு ஜார்ஜுக்கு 12 துறைகளும் கடந்த 2021 மே மாதம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்தந்த துறைகளில் ஏற்படும் பிரச்சனைகள், ஆய்வுகள், தீர்வுகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளைக் கவனிக்கும் தனது செயலாளரிடம் தான் விவாதிப்பார் முதல்வர். விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு தேவையான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பிப்பார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அனு ஜார்ஜ் நீண்ட விடுமுறை எடுத்திருந்தார். இதனால் அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மற்ற மூன்று செயலாளர்களுக்கும் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. “கிட்டத்தட்ட 3 மாதங்கள் நீண்ட விடுப்பில் அனு ஜார்ஜ் சென்றதால் அவர் கவனித்து வந்த செயலாளர் பணியிடத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமித்திருக்கலாம். அதைச் செய்யாமல் அவர் கவனித்து வந்த 12 துறைகளையும் மற்ற 3 செயலாளர்களுக்கும் பிரித்துத் தர வேண்டுமா? அனு ஜார்ஜ் தவிர திறமையான அதிகாரிகள் யாருமே இல்லையா என்ன?” என்று அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. (இதனை அப்போதே நக்கீரன் இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம்).
இந்த நிலை அப்படியே நீடித்து வந்தது. இந்தச் சூழலில் விடுமுறை முடிந்து அனு ஜார்ஜ் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். பணிக்குத் திரும்பியதால் ஏற்கனவே அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மீண்டும் அவருக்கே ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் முதல்வரின் செயலாளராக இருந்து சுற்றுச்சூழல், பிற்படுத்தப்பட்டோர் நலம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, சமூக நலன், ஆதிதிராவிடர்-பழங்குடியினர், சுற்றுலா, கால்நடை-மீன்வளம்-பால்வளம், கைத்தறி, சமூக மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட துறைகளோடு முதல்வர் ஸ்டாலினின் அப்பாயிண்ட்மென்ட்டும் கவனிப்பார் அனு ஜார்ஜ்.